காட்டெருமை தாக்கி பெண் பலி
ஊட்டி அருகே காட்டெருமை தாக்கி பெண் பலியானார்.
ஊட்டி
ஊட்டி அருகே காட்டெருமை தாக்கி பெண் பலியானார்.
தேயிலை பறிக்கும் பணி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நஞ்சநாடு அருகே அம்மனட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி(வயது 57). இவர்கள் இன்று நஞ்சநாடு அருகே நரிக்குழி ஆடா பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதற்கிடையில் ஜெயலட்சுமியிடம் மோட்டார் மூலம் மருந்து தெளிக்கும் பணிக்காக எரிபொருள் எடுத்து வரும்படி நடராஜன் கூறினார். தொடர்ந்து அருகில் உள்ள ஓரிடத்தில் வைக்கப்பட்டு இருந்த எரிபொருளை எடுக்க சென்ற ஜெயலட்சுமி வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. உடனே நடராஜன் அவரை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அங்கு சம்பவ இடத்துக்குக்கு சென்று பார்த்தார்.
காட்டெருமை தாக்கியது
அங்கு ஜெயலட்சுமி படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருப்பது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நடராஜன், அவரிடம் விசாரித்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி தேயிலை தோட்டத்தில் சுற்றிய காட்டெருமை ஒன்று திடீரென அவரை தாக்கியது தெரியவந்தது.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜெயலட்சுமியை மீட்டு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் கொண்டு செல்லப்பட்டது.
நிவாரண தொகை
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஊட்டி ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டெருமை தாக்கி பலியான ஜெயலட்சுமியின் குடும்பத்தினருக்கு நீலகிரி கோட்ட வன அலுவலர் சச்சின் நிவாரண தொகை முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கினார்.
Related Tags :
Next Story