மார்த்தாண்டத்துக்கு காரில் கடத்தி வந்த 174 கிலோ குட்கா பறிமுதல்
கேரளாவில் இருந்து மார்த்தாண்டத்துக்கு காரில் கடத்தி வந்த 174 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
குழித்துறை:
கேரளாவில் இருந்து மார்த்தாண்டத்துக்கு காரில் கடத்தி வந்த 174 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது
குட்கா கடத்தல்
கேரளாவில் இருந்து மார்த்தாண்டம் பகுதிக்கு காரில் அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வருவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் தலைமையில் போலீசார் மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு கார் கேரளாவிலிருந்து மார்த்தாண்டத்துக்கு வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது கார் மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு ஒற்றைப்பனைவிளையில் உள்ள ஒரு வீட்டின் முன் நின்றது.
174 கிலோ பறிமுதல்
அதைத்தொடர்ந்து போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து சோதனை போட்டனர். அப்போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா 16 மூடைகளில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் எடை 174 கிலோ ஆகும்.
அதை தொடர்ந்து கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 174 கிலோ குட்காவையும், அதை கடத்த பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாலிபர் கைது
மேலும் குட்காவை கடத்தி வந்த கிளீட்டஸ் (வயது 35) என்ற வாலிபரை போலீசார் பிடித்தனர். அவரிடம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் விசாரணை நடத்தினார். அப்போது அவர் மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் என்றும், கேரள மாநிலம் பீமா பள்ளி பகுதியில் இருந்து குட்காவை கடத்தி வந்ததாகவும், மீண்டும் இந்த குட்காவையே கேரளாவில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்ததாகவும் கூறினார். அதை தொடர்ந்து கிளீட்டசை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story