வளர்ச்சி இல்லாத மாவட்டங்களில் புதிய தொழிற்சாலை உருவாக்கப்படும்
தொழில்கள் ஒரே இடத்தில் குவியாமல் வளர்ச்சி இல்லாத மாவட்டங்களில் புதிய தொழிற்சாலை உருவாக்கப்படும் என்று திண்டிவனம் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பெலாக்குப்பத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் லோட்டஸ் காலணி நிறுவனங்களின் துணை நிறுவனமான செய்யார் எஸ்.இ.இசட் டெவலப்பர்ஸ் சார்பில் ரூ.500 கோடி மதிப்பில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
அதன் பின்னர் அவர் பேசியதாவது:-
சம விகிதத்தில் வளர...
தமிழகத்தில் தொழில்துறை போன்று அனைத்து துறையும் வளர வேண்டும், அதுவும் அனைத்து துறைகளும் சம விகிதத்தில் வளர வேண்டும் என்று நினைக்கக்கூடிய வகையில் இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில், தொழில் வளர்ச்சியில், சமூக திறனில் நாம் யாருக்கும், எந்த மாநிலத்தவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை தீட்டி அதனை சீரும் சிறப்புமாக செயல்படுத்தி வருகிறது.
நல்லாட்சியின் அடையாளம்
தொழில் வளர்ச்சிக்கு நாம் அதிக முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கிறோம். அத்தகைய தொழில்கள் ஒரே இடத்தில் குவியாமல், தொழில் வளர்ச்சி இல்லாத மாவட்டங்களில் புதிய தொழிற்சாலை உருவாக்கப்படும். அனைத்து துறைகளும், அனைத்து மாவட்டங்களிலும் வளர வேண்டுமென்று நினைக்கிறோம்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற இந்த 10 மாத காலத்தில் தமிழகத்தை நோக்கி ஏராளமான நிறுவனங்கள் வரத்தொடங்கி இருக்கிறது. இதுதான் ஒரு நல்லாட்சியின் அடையாளமாக, எடுத்துக்காட்டாக விளங்கிக்கொண்டிருக்கிறது.
மகளிர் கொள்கை
காலணி உற்பத்தியில் தேசிய மற்றும் உலக அளவில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. தமிழகத்தின் பங்களிப்பு தேசிய காலணி உற்பத்தியில் 26 விழுக்காடாகவும், ஏற்றுமதியில் 45 விழுக்காடாகவும் இருக்கிறது. காலணி மற்றும் விளையாட்டிற்கு பயன்படுத்தப்படும் காலணி சந்தையை கைப்பற்ற நம் மாநிலம் பெரும் வாய்ப்புகளை பெற்றிருக்கிறது.
தமிழகத்திற்கென தோல் மற்றும் காலணி கொள்கை விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. ஏற்கனவே பல காலணி தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி கொண்டிருக்கிறார்கள். ஆகவே அத்துறையில் அதிகளவில் முதலீடுகளை ஈர்த்திட முடியும் என்று நான் நம்புகிறேன். மோட்டார் வாகனத்துறை, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், பட்டாசு ஆலைகள், காலணி மற்றும் தோல் பொருட்கள் துறை உள்ளிட்ட பல துறைகளிலும் பெண்கள் பெருமளவில் பணி செய்து வருகிறார்கள். சமூகநீதி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் கொள்கை ஒன்றை விரைவில் அரசின் சார்பில் வெளியிட இருக்கிறோம்.
ரூ.68,375 கோடி முதலீடு
நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற இந்த 10 மாதங்களிலேயே இதுவரை 68,375 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 2 லட்சத்து 5 ஆயிரத்து 402 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. ஒன்றிய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை தன்னுடைய அறிக்கையில் அகில இந்திய அளவில் அன்னிய முதலீடு கடந்த ஆண்டை விட 16 விழுக்காடு குறைந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கக்கூடிய அதே வேளையில் சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் ஈர்க்கப்பட்ட அன்னிய முதலீடுகளை விட இந்த ஆண்டு ஈர்க்கப்பட்ட முதலீடுகள் 41.5 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. இந்த வளர்ச்சி என்பது ஒரு மிகப்பெரிய சாதனை. இது இந்த நல்லாட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு நல்ல பெயர்.
1 டிரில்லியன் அமெரிக்க டாலர்
2030-ம் ஆண்டில் நம்முடைய மாநிலம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற வேண்டும் என்கிற நமது அரசின் லட்சிய இலக்கை பற்றி நான் தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறேன். இந்த இலக்கினை அடைவதற்காக நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் வெளிப்படையான நிர்வாகம் நடக்கிறது. முதலீடுகளை ஊக்குவிக்கக்கூடிய நல்லாட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் எதிர்கால தொழிற்சாலைகளையும் தமிழ்நாட்டிற்கே கொண்டு வாருங்கள், உங்கள் புதிய முதலீடுகளையும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செய்யுங்கள். தமிழ்நாடு இளைஞர்களின் திறனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் திறந்த மனதுடன் செய்ய நம் அரசு தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
Related Tags :
Next Story