முத்தூர் அருகே நத்தக்காடையூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் மஞ்சள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன


முத்தூர் அருகே நத்தக்காடையூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் மஞ்சள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
x
தினத்தந்தி 5 April 2022 10:12 PM IST (Updated: 5 April 2022 10:12 PM IST)
t-max-icont-min-icon

முத்தூர் அருகே நத்தக்காடையூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் மஞ்சள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

முத்தூர்
முத்தூர் அருகே நத்தக்காடையூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் மஞ்சள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கீழ்பவானி பாசன பகுதிகள்
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் நகரம் மற்றும் பழையகோட்டை, மருதுறை, குட்டப்பாளையம், முள்ளிப்புரம், பரஞ்சேர்வழி வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன கால்வாய்களில் ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக திறந்துவிடப்படும் தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல் மற்றும் எள், நிலக்கடலை, சூரியகாந்தி, மக்காச்சோளம் ஆகிய எண்ணெய் வித்து பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. 
மேலும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீர், குளம், ஓடை பாசன நீர் மூலம் மஞ்சள், கரும்பு, வாழை மற்றும் காய்கறிகள், கீரை வகைகள் சாகுபடி, மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி உள்ளிட்ட பழவகை சாகுபடியும் நடைபெற்று வருகிறது.
மஞ்சள் சாகுபடி
இந்த நிலையில் இந்தியாவில் மஞ்சள் விற்பனைக்கு புகழ் பெற்ற ஈரோடு மஞ்சள் மார்க்கெட் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குவிண்டால் மஞ்சள் விலை ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் கடந்த 12 ஆண்டுகளாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினர்.
இதன்படி இந்த ஆண்டு நத்தக்காடையூர் நகர, சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரையில் என மொத்தம் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு வரை மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 
இதன்படி மஞ்சள் சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்கு வயல்களில் மண் செப்பனிடுதல், குப்பை இடுதல், நல்ல தரமான விதை மஞ்சள், சிறு விதை மஞ்சள் கிழங்கு நடவு செய்தல், பயிர் பாதுகாப்பு மேலாண்மை, உர பாதுகாப்பு மேலாண்மை, களை எடுத்தல் என ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளனர்.
மஞ்சள் அறுவடை பணிகள்
இந்த நிலையில் இப்பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த மஞ்சள் செடிகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் மஞ்சள் அறுவடை பணிகள் கடந்த 2 வாரகாலமாக தொடங்கப்பட்டு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த மஞ்சளை விவசாயிகள் இருப்பு வைப்பார்கள்.
ஈரோடு மஞ்சள் மார்க்கெட், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மஞ்சள் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படும் போது மஞ்சள் சாகுபடி விவசாயிகள் இருப்பு வைத்த மஞ்சளை நேரில் கொண்டு சென்று ஏலம், டெண்டர் விற்பனை முறையில் விற்று பலன் அடைவார்கள். 
இதன்படி தற்போது நத்தக்காடையூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் மஞ்சள் கிழங்கு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story