சொத்து வரி உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சொத்து வரி உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2022 10:34 PM IST (Updated: 5 April 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை:
தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து, அதனை திரும்ப பெறக்கோரி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டையில் சாந்தநாதபுரம் கடைவீதியில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சுகாதார துறை அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘அ.தி.மு.க. கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்துவிட்டார்கள். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ரூ.140 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடைபெற்றது. ஆனால் தற்போது இந்த திட்டம் நிறைவேறுமா? என மக்கள் கேட்கிறார்கள். தாலிக்கு தங்கம் திட்டம் போலத்தான் இந்த திட்டத்தின் நிலை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் சட்டம்- ஒழுங்கு சீர் குலைக்கப்பட்டுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதற்கு பின்னால் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும். மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டங்களில் அ.தி.மு.க. உறுப்பினர்களை புறக்கணித்தால் மதுரை ஐகோர்ட்டை நாடுவோம். இந்த ஆட்சியின் நடவடிக்கைகளை மக்கள் பார்த்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வட்டியும், முதலுமாக கொடுப்பார்கள்’’ என்றார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

Next Story