25 வயது வாலிபருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
25 வயது வாலிபருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 25 வயது வாலிபருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்திய டாக்டர்கள் குழுவினரை கல்லூரி டீன் முருகேசன் பாராட்டினார்.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
திருப்பூர் கோல்டன்நகர் ராஜாமாதா நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 25). இவர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார். இவர் இடுப்பு மூட்டு வலியால் கடந்த 2 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக அவர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இடுப்பு பந்து கிண்ண மூட்டில் ரத்த ஓட்டம் குறைந்ததால் மூட்டு தேய்மானம் ஏற்பட்டது. இதனால் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
பாஸ்கரனுக்கு முழு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கல்லூரி டீன் முருகேசன் வழிகாட்டுதலின்படி, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் குமார், துணை பேராசிரியர் விஜயராஜ், மயக்கவியல்துறை இணை பேராசிரியர்கள் பூங்குழலி, ராதா, டாக்டர்கள் பிரியதர்ஷினி, செல்வக்குமார், செவிலியர்கள் ரேவதி, சோபியா அடங்கிய மருத்துவ குழுவினர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர். தற்போது பாஸ்கரன் குணமடைந்து வருகிறார். இதற்காக மருத்துவ குழுவினரை டீன் முருகேசன் பாராட்டினார். அதுபோல் குணமடைந்த பாஸ்கரன் மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
முற்றிலும் இலவசம்
இதுபோல் கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த சுப்பாத்தாள் (55) என்பவருக்கும் இடுப்பு மூட்டு தேய்மானம் ஆனதால் கடந்த 5 ஆண்டுகளாக அவதியடைந்து வந்தார். அவருக்கும் மூட்டு மாற்றும் அறுவை சிகிச்சையை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ குழுவினர் செய்து குணப்படுத்தினார்கள். தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆனால் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story