ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
புத்தூர்-மாதிரவேளூர் சாலையை சீரமைக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர
கொள்ளிடம்
கொள்ளிடம் அருகே உள்ள புத்தூரிலிருந்து ஆனந்தக்கூத்தன், சோதியகுடி, கீரங்குடி, சிதம்பரநாதபுரம் வழியாக மாதிரவேளூர் செல்லும் தார்ச்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மேம்படுத்தப்படாததால் குண்டும்-குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், விரக்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இந்த சாலையை சீரமைக்கக்கோரி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேல், ஒன்றிய செயலாளர் கேசவன் உள்பட பொதுமக்கள் பலர் கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோவிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் பங்கற்றனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பொறியாளர் தாரா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வருகிற 30-ந் தேதிக்குள் நிர்வாக அனுமதி பெற்று சாலையை மேம்படுத்தும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story