வாக்களித்த மக்களுக்கு வரி உயர்வு தான் தி.மு.க.வின் பரிசு-முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
வாக்களித்த மக்களுக்கு வரி உயர்வு தான் தி.மு.க.வின் பரிசு என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்,
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்துவரி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏழை, எளிய மக்களுக்கான அரசாக, சட்டம் -ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய அரசாக அ.தி.மு.க. அரசு 10 ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்தது. தற்போது தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளது. 150 சதவீதம் வரை வரி உயர்வை மக்கள் தாங்க முடியுமா? என்பதை தி.மு.க. சிந்தித்து பார்க்க வேண்டும். வாக்களித்த மக்களுக்கு வரி உயர்வுதான் தி.மு.க.வின் பரிசு. சொத்துவரி உயர்வு மட்டுமல்ல, அடுத்ததாக மின்சார கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் அனைத்து துறைகளிலும் மக்கள் மீது வரி சுமையை வைத்து சுகபோக ஆட்சி நடத்தலாம் என நினைத்து கொண்டிருக்கும் தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். மக்கள் சக்தி என்ன என்பதை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். 13 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்துவிட்டு, 35 லட்சம் மக்களை கடன்காரராக ஆக்கிய அரசுதான் தி.மு.க. சொத்துவரியை மத்திய அரசு உயர்த்த சொல்லியதால் தான் நாங்கள் உயர்த்துகிறோம் என்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. மத்திய அரசு டீசலுக்கு ரூ.10 குறைத்தது. மாநில அரசை குறைக்க சொன்னார்கள். அப்போது ஏன் விலை குறைக்கவில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதுபோல் பம்பர் பரிசுகளை பெற்றுக்கொண்டுதான் மக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க போகிறார்கள்.
கட்சியை வழிநடத்தினால் போதும், மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தான். பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும். எப்போது தேர்தல் வைத்தாலும், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற கூடிய கட்சி அ.தி.மு.க. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் சின்னசாமி, துணை செயலாளர் சிவசாமி, அவைத்தலைவர் காளியப்பன், பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன், இளைஞர், இளம்பெண் பாசறை செயலாளர் கமலக்கண்ணன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், கரூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பாலமுருகன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story