தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9176108888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்வருமாறு:-
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் கிராமப்புற மாணவ- மாணவிகள் அதிக அளவில் படித்து வருகிறார்கள். இவர்கள் பள்ளிக்கு வரும் நேரத்திலும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரத்திலும் போதிய பஸ்வசதி இல்லாததால் தினமும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
-சிவகுமார், ஆற்காடு.
சாலையை சீரமைக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் புலிவலம் கிராமத்தில் அரசுப்பள்ளி அருகே சிமெண்டு குழாய் அமைத்து பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலத்தின்மேல் செல்லும் சாலை சேதமடைந்து 12 அடியாக இருந்த சாலை தற்போது 4 அடியாக மாறிவிட்டது. இதனால் வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை உள்ளது. உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்.
-மூர்த்தி, புலிவலம்.
சாலை அமைக்கப்படுமா?
திருப்பத்தூர் தாலுகா கந்திலி ஒன்றியம், செவ்வாத்தூர் ஊராட்சியில் உள்ள ஏரிக்கரையை பல்வேறு கிராம மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகிறார்கள். இதில் வாகனங்களும் சென்று வருகின்றன. தற்போது ஏரியை தூர்வாரி அந்த மண்ணை கரையில் போட்டுள்ளதால் அதன் வழியாக செல்லும் மக்கள் வழுக்கி விழும் நிலை உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக ஏரிக்கரையில் தார்சாலை அமைக்கவேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
-கே.காளிமூர்த்தி, செவ்வாத்தூர்.
வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சி 12-வது வார்டில் உள்ள கடைத்தெருவில் போலீஸ் நிலையம், மசூதிகள், கோவில்கள், கிராமநிர்வாக அலுவலகம், மாணவர் விடுதி ஆகியவை உள்ளன. நெருக்கடி நிறைந்த இந்த தெருவில் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை சாலை மற்றும் கால்வாய் மீது நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் செல்லமுடியாத வகையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற வேண்டும்.
-மங்களம் ரமேஷ், கவுன்சிலர். சேத்துப்பட்டு.
சுகாதாரநிலையத்தை தினமும் திறக்க வேண்டும்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகாவில் உள்ள எம்.வி.குப்பத்தில் 48 ஆண்டுகளுக்கு முன்பு துணைசுகாதார நிலையம் திறக்கப்பட்டது. தொடர்ந்து வாடகை கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த துணைசுகாதார நிலையம் தினமும் திறக்கப்படுவதில்லை. ஏதாவது ஒருநாள் மட்டும் திறக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் சிகிச்சைபெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். சொந்த கட்டிடம் கட்டி துணை சுகாதார நிலையத்தை தினமும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலீல் நிஷார் அகமத், எம்.வி.குப்பம்.
பன்றிகளால் தொல்லை

காட்பாடி காந்திநகர் 24-வது கிழக்கு குறுக்கு தெருவில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் அருகிலேயே தினமும் 100-க்கணக்கான பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரிவதுடன் சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளை கிளறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. சிலநேரங்களில் சாலையில் கூட்டமாக செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பன்றிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாக்டர் பரந்தாமன், காட்பாடி.
மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வழியாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் ஆம்பூர் நகரப்பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. நகராட்சி எல்லைக்கு பிறகு மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நகரில் போக்குவரத்து மிகுந்த சாலைப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.ரவிச்சந்திரன், ஆம்பூர்.
Related Tags :
Next Story






