சரக்கு வாகன டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்


சரக்கு வாகன டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 April 2022 1:39 AM IST (Updated: 6 April 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு வாகன டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கீழப்பழுவூர்:

சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தை சேர்ந்தவர் விடுதலைமணி(வயது 24). இவர் தனது மோட்டார் சைக்கிளில் அவரது நண்பர் பழனிவேல்ராஜனுடன் கடந்த 2-ந் தேதி ஏலாக்குறிச்சி நோக்கி சென்றார். அப்போது ஏலாக்குறிச்சியில் இருந்து வந்த சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த விடுதலைமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். பழனிவேல்ராஜன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் விடுதலைமணியின் உயிரிழப்பிற்கு காரணமான சரக்கு வாகன டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று விடுதலைமணியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திருமானூர்-ஏலாக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சரக்கு வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டிரைவரையும் கைது செய்யவில்லை. சரக்கு வாகனத்தின் உரிமையாளரையும் கைது செய்யவில்லை. விசாரணையும் நடத்தவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, டிரைவரை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story