கோவில் அருகில் மின்மயானம் அமைக்க தடை கேட்டு வழக்கு
கோவில் அருகில் மின்மயானம் அமைக்க தடை கேட்ட வழக்கில் தொல்லியல் துறை கமிஷனர் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த நாகராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- சங்கரன்கோவில் வழியாக நெல்லை செல்லும் பிரதான சாலை ஓரத்தில் அருவம் சூடிய விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கற்கோவில் ஆகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக திருச்செந்தூர் கோவிலுக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் இந்த கோவிலில்தான் ஓய்வு எடுக்கின்றனர்.
இந்த கோவில் சுமார் 200 ஏக்கர் நஞ்சை நிலங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கோவில் கட்டிடத்தை ஒட்டிய நிலம் காலி இடமாக உள்ளதால், அறுவடை காலத்தில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அந்த காலி இடத்தை களமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கோவிலின் அருகில், சங்கரன்கோவில் ஊருக்கான மின் மயானம் அமைக்க, சங்கரன்கோவில் நகராட்சி முடிவு செய்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலை ஒட்டி மயானம் அமைப்பது பழங்கால கோவிலையும் அதன் முக்கியத்துவத்தையும் பாதிக்கும். புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கும், கோவில் கட்டிடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாகுபடிப் பணிகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே அருவம் சூடிய விநாயகர் கோவிலை தொல்லியல் துறை ஆய்வு செய்து பழங்கால சின்னமாக அறிவிக்கவும், கோவில் அருகே மின் மயானம் அமைப்பதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சம்பந்தப்பட்ட இடத்தை தமிழக தொல்லியல் துறை கமிஷனர் ஆய்வு செய்து மனுதாரர் மனுவை பரிசீலித்து 6 மாதத்திற்குள் உரிய முடிவெடுக்கும்படி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Related Tags :
Next Story