“பூட்டிய அறைக்குள் போலீசார் தாக்கியதால் தந்தை-மகனின் கதறல் சத்தத்தை கேட்டோம்”-மதுரை கோர்ட்டில், கண்டக்டர் சாட்சியம்
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் பூட்டிய அறைக்குள் போலீசார் தாக்கியதால் தந்தை-மகனின் கதறல் சத்தத்தை கேட்டோம் என்று மதுரை கோர்ட்டில் கண்டக்டர் சாட்சியம் அளித்து உள்ளார்.
மதுரை,
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் பூட்டிய அறைக்குள் போலீசார் தாக்கியதால் தந்தை-மகனின் கதறல் சத்தத்தை கேட்டோம் என்று மதுரை கோர்ட்டில் கண்டக்டர் சாட்சியம் அளித்து உள்ளார்.
இரட்டைக்கொலை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு போலீசாரால் தாக்கப்பட்டு, பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் போலீஸ்காரர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கு நீதிபதி பத்மநாபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கைதான 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் பேய்க்குளத்தைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் ஆரோக்கியசாமி என்பவர் ஆஜராகி, சாட்சியம் அளித்தார். அவரிடம் எதிர்தரப்பினர் சார்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
முடிவில், இந்த வழக்கு விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் போலீஸ் இன்ஸ்பெக்டரின் வாகன டிரைவர் ஜெயசேகரன் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளார்.
கதறல்
நேற்றைய விசாரணையின்போது ஆஜரான ஆரோக்கியசாமி சாட்சியம் அளித்தபோது, சம்பவத்தன்று ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, வேறு ஒரு சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அங்கு நான் உள்ளிட்ட பலர் அந்த போலீஸ் நிலையத்தில் இருந்தோம்.
அப்போது அவர்கள் இருவரையும் அங்குள்ள ஒரு அறைக்குள் அழைத்துச்சென்ற போலீசார், கதவை பூட்டினர். பின்னர் அவர்களை போலீசார் தாக்கியதால், வலி தாங்க முடியாமல் இருவரும் கதறினர். அவர்களின் இந்த கதறலை அங்கிருந்த நாங்கள் அனைவரும் கேட்டோம், என்று அவர் சாட்சியம் அளித்ததாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story