சேலத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து சேலத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:-
சொத்து வரி உயர்வை கண்டித்து சேலத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி உள்ளதை கண்டித்தும், தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் போன்ற அ.தி.மு.க. அரசின் சாதனை திட்டங்களை தி.மு.க. அரசு கைவிட்டதாக கூறி அதை கண்டித்தும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்டாஜலம், அவைத்தலைவர் பன்னீர் செல்வம், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அமைப்பு செயலாளர் செம்மலை தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் சொத்து வரி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைவார்கள். விரைவில் குடிநீர் வரி, திடக்கழிவு மேலாண்மை வரி ஆகியவையும் உயர வாய்ப்பு உள்ளது. மின்சார வாரியத்தில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடியும், போக்குவரத்து துறையில் ரூ.48 ஆயிரம் கோடியும் கடன் உள்ளது. இதனால் மின்கட்டணம், பஸ் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் ஓட்டுப்போட்ட மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
ஏற்றுக்கொள்ள முடியாது
சேலம் மாநகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்படுகிறது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. மக்கள் நலன் காக்கும் அரசாக தி.மு.க. இல்லை. கடந்த 10 ஆண்டு காலம் நிதிச்சுமை இருந்தது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கொரோனாவில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கச்சொன்னால் மத்திய அரசு மீது குறை கூறுகிறார்கள். மத்திய அரசு பெட்ரோலுக்கான மானிய விலையை குறைத்து உள்ளது. மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்க முடியாது.
எனவே வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு அதிருப்்தி இல்லை. ஆனால் கடந்த 10 மாத தி.மு.க. ஆட்சியில் மக்கள் வெறுப்பை தி.மு.க. சம்பாதித்து இருக்கிறது. விரைவில் மக்களின் கோபத்திற்கு தி.மு.க. ஆளாகப்போகிறது. எனவே மீண்டும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்பிரமணியன், ராஜமுத்து, மணி, சுந்தர்ராஜன், சித்ரா, ஜெய்சங்கரன், நல்லதம்பி,உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story