சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2022 2:48 AM IST (Updated: 6 April 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

நாகர்கோவில்:
சொத்து வரி உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
சொத்துவரி உயர்வு
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும், தேர்தல் நேரத்தில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நல திட்டங்களை நிறுத்த கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 5-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. அரசுக்கு தகுந்த பாடம்
அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து வரியை உயர்த்திய போது மக்களின் சொத்துகளை அ.தி.மு.க. பறிப்பதாக குற்றம் சாட்டினார்கள். ஆனால் தி.மு.க. அரசு 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி உள்ளது. எனவே மக்களின் சொத்துகளை யார் பறிக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொத்து வரி உயர்ந்தால் வீட்டு வாடகை உயரும். இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மக்களை வாட்டி வதைக்கும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. எனவே மக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அரசுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.
நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய வந்தார். ஆனால் இதுவரை எந்த சாலையும் சீரமைக்கப்படவில்லை. நாகர்கோவில் மாநகராட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. அதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆரல்வாய்மொழியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை மாற்ற தி.மு.க. அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். ஆனாலும் அதை அரசு கண்டுகொள்ளவில்லை. ஒரு அமைச்சர் சாதி பெயரை சொல்லி அதிகாரியை திட்டி உள்ளார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்டன கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துகுமார், துணைத்தலைவர் சுதா பாலகிருஷ்ணன் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக் ஷயா கண்ணன், ஒன்றிய செயலாளர் குற்றியார் நிமால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர செயலாளர் சந்துரு நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
1 More update

Next Story