தூத்துக்குடி மாநகராட்சியில் மழை வெள்ள நீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை: கலெக்டர் செந்தில்ராஜ்
தூத்துக்குடியில் வெள்ளநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வெள்ளநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள தனியார் கடல் உணவு நிறுவனம் அருகில் இருந்து உப்பாற்று ஓடை, பாண்டியாபுரம், மாப்பிள்ளையூரணி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மழை வெள்ளம்
தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த முறை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, தமிழக முதல்-அமைச்சர் நேரடியாக வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து வரும் காலங்களில் வெள்ளநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி வருவாய்துறை, மாநகராட்சி உள்ளிட்ட துறை அலுவலர்கள் இணைந்து இதற்கான திட்டத்தை செயல்படுத்தினோம்.
மாநகராட்சி பகுதியில் மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம் பகுதிகளில் ரகுமத்நகர், முத்தம்மாள்காலணி, ஜோதிநகர் பகுதியில் தண்ணீர் அதிகமாக தேங்கியது. தற்போது இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த பணிகளை முடித்தால் ரகுமத்நகர், முத்தம்மாள்காலணி பகுதியில் தண்ணீர் தேங்காமல் கடலுக்கு செல்லும். அம்பேத்கர்நகர், பிரைண்ட்நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
நடவடிக்கை
மாநகராட்சியின்கீழ் 1-வது வார்டுக்கு உட்பட்ட பாண்டியாபுரம், சங்கரப்பேரி, ஜோதிநகர், 5-வது வார்டுக்கு உட்பட்ட ஓம்சாந்திநகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு வடிகால்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்று ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து அதற்கான திட்டங்களை தயாரித்து துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஓம்சாந்திநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 932.75 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் பூங்கா பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் செயல்பட்டு வரும் மவுண்ட் சியோன் நர்சரி பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள புற்களை அகற்றி வளாகத்தினுள் மழை வெள்ளம் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஒத்துழைப்பு
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை காலங்களில் ஏற்படும் மழைநீரை வடக்கு மண்டலம் மச்சாதுநகர் குளம் மற்றும் பெரிய பள்ளம் ஓடை ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மழை நீரை கொண்டு சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டது. வருகிற மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க மாநகராட்சிக்கு மாவட்ட நிர்வாகம் தேவையான ஒத்துழைப்பு வழங்கும். இதுதொடர்பாக மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும். உப்பாற்று ஓடையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாப்பிள்ளையூரணி
இதனை தொடர்ந்து மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள கோப்புகள், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், இ-சேவை மையம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரி மாணவர் விடுதியில் உணவு அருந்தும் அறை, சமையல் அறை, பொருள் வைக்கப்படும் அறை, கழிப்பறை, காப்பாளர் அறை, இருப்பு பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு அவற்றை நிவர்த்தி செய்ய காப்பாளருக்கும், துறை சார்ந்த அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் ஜஸ்டின், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பரிமளா, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற் பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர்கள் பிரின்ஸ், காந்திமதி, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து செயல் அலுவலர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story