‘செல்பி’ எடுத்த வாலிபர்களை துரத்திய காட்டுயானை கூட்டம்


‘செல்பி’ எடுத்த வாலிபர்களை துரத்திய காட்டுயானை கூட்டம்
x
தினத்தந்தி 6 April 2022 7:34 PM IST (Updated: 6 April 2022 7:34 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ‘செல்பி’ எடுத்த வாலிபர்களை காட்டுயானை கூட்டம் துரத்தியது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ‘செல்பி’ எடுத்த வாலிபர்களை காட்டுயானை கூட்டம் துரத்தியது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

குட்டிகளுடன் காட்டுயானைகள்

கோடைகாலம் தொடங்கிவிட்டதால், சமவெளி பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. மேலும் வனப்பகுதிகளில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து வருகின்றனர். மேலும் நீர்நிலைகளிலும் தண்ணீர் வற்ற தொடங்கிவிட்டது. இதன் காரணமாக காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம், கூட்டமாக இடம்பெயர்ந்து வருகின்றன. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 2 குட்டிகளுடன் 9 காட்டுயானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளன. அவை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. 

‘செல்பி’

இதற்கிடையில் ரன்னிமேடு, காட்டேரி, கிளண்டேல் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீரை தேடி அந்த காட்டுயானைகள் அலைந்து திரிகின்றன. 

சமீபத்தில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை அந்த காட்டுயானைகள் கூட்டமாக கடக்க முயன்றன. அப்போது அந்த வழியாக வந்தவர்கள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். அதில் சில வாலிபர்கள், காட்டுயானை கூட்டத்துடன் ‘செல்பி’ எடுத்து கொண்டு இருந்தனர். 

வீடியோ வைரல்

இதை கண்ட காட்டுயானைகள் திடீரென ஆக்ரோஷம் அடைந்து அவர்களை துரத்த தொடங்கின. இதை சற்றும் எதிர்பாராத வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். எனினும் தொடர்ந்து விரட்டாத காட்டுயானைகள், சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. 

அதன்பின்னரே வாலிபர்கள் உள்பட அங்கு காத்திருந்த வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ, தற்போது வைரலாக பரவி வருகிறது.


Next Story