டிட்வாலாவில் வியாபாரியிடம் ரூ.1 கோடி தங்கம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
டிட்வாலாவில் வியாபாரியிடம் ரூ.1 கோடி தங்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தானே,
டிட்வாலாவில் வியாபாரியிடம் ரூ.1 கோடி தங்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ரூ.1 கோடி தங்கம்
மும்பை லால்பாக் பகுதியை சேர்ந்தவர் நகை வியாபாரி ராகேஷ் ஜெயின். இவர் நேற்று தங்க வியாபாரத்திற்காக உறவினருடன் டிட்வாலா நகை மார்க்கெட்டுக்கு சென்று இருந்தார். மார்க்கெட் அருகில் உள்ள பகுதியில் காரை நிறுத்திவிட்டு சில கடைக்காரர்களிடம் நகை மாடல்களை காண்பித்தனர். பின்னர் அவர்கள் வேலை முடிந்து மதிய நேரத்தில் காருக்கு திரும்பினர்.
அப்போது காரின் டயர் பஞ்சராகி இருந்தது. எனவே அவர்கள் பஞ்சரான காரின் டயரை மாற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காரின் பின்பக்க கதவை திறந்து உள்ளே இருந்த தங்க நகைப்பையை கொள்ளையடித்து சென்றனர். நகைப்பையில் 2 ஆயிரத்து 330 கிராம் தங்கம், ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், பணம் இருந்தது.
போலீஸ் விசாரணை
இந்த கொள்ளை சம்பவம் குறித்து ராகேஷ் ஜெயின் டிட்வாலா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரியிடம் ரூ.1 கோடி தங்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளையில் ராகேஷ் ஜெயினுக்கு அறிமுகமானவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். பட்டப்பகலில் நகை வியபாரியிடம் ரூ.1 கோடி தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் டிட்வாலாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story