ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகை
ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
செம்பட்டி:
செம்பட்டி அருகே பாளையங்கோட்டை ஊராட்சியில் பாளையங்கோட்டை, கூலம்பட்டி, பிரவான்பட்டி, காமன்பட்டி உள்பட 7 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பாளையங்கோட்டை ஊராட்சியில் வீட்டுவரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதில், குறிப்பாக சொந்த வீடு இருந்து, அந்த வீட்டிற்கு வரி செலுத்தும் நபர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் அறிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து சொந்த வீடு இல்லாத 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர், ஊராட்சி வார்டு உறுப்பினர் சீனியம்மாள் தலைமையில் நேற்று செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இதுகுறித்து அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்ைக எடுக்கப்படும் என்றார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story