கரும்பு அரவை தொடக்கம்


கரும்பு அரவை தொடக்கம்
x

கரும்பு அரவை தொடக்கம்

உடுமலை, 
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாதகாலத்தை கரும்பு அரவைப்பருவமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி 2021-2022-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்காக 2,010 ஏக்கர் கன்னி கரும்பும், 1,000 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 3,010 ஏக்கர் கரும்பு பதிவு (ஒப்பந்தம்) செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு அரவைப்பருவத்திற்கு 1 லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 2021-2022-ம் ஆண்டு கரும்பு அரவையைதொடங்குவதற்காக கடந்த மாதம் (மார்ச்) 23-ந்தேதி ஆலையின் கொதிகலன்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா நடந்தது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை தொடக்கவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு ஆலையின் மேலாண்மை இயக்குனர் செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ஆர்.ஜெயராமகிருஷ்ணன், சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கத்தலைவர் சி.சண்முகவேலு, ஆலையின் நிர்வாகக்குழு தலைவர் காங்கயம்பாளையம் சின்னப்பன் என்கிற எஸ்.பழனிச்சாமி, துணைத்தலைவர் என்.முத்துராமலிங்கம், கரும்பு பயிரிடுவோர் சங்க பொதுச்செயலாளர் நீலம்பூர் டபிள்யூ. என்.கே.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஈஸ்வரசாமி, பேரூராட்சி தலைவர் கலைவாணி பாலமுரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்கள் கரும்பை கேன் கேரியரில் போட்டு அரவையை தொடங்கி வைத்தனர்.

Next Story