துணை போலீஸ் சூப்பிரண்டு சிறையில் அடைப்பு
குமரி மாவட்டத்தில் ரூ.5 லட்சம் லஞ்ச வாங்கியதாக கைது செய்யப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய வீட்டில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.5 லட்சம் சிக்கியது.
நாகா்கோவில்:
குமரி மாவட்டத்தில் ரூ.5 லட்சம் லஞ்ச வாங்கியதாக கைது செய்யப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய வீட்டில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.5 லட்சம் சிக்கியது.
ஜவுளிக்கடை அதிபரிடம் லஞ்சம்
நாகர்கோவில் புன்னைநகரை சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம் (வயது 66). ஜவுளிக்கடை அதிபரான இவரிடம் ரூ.1.5 கோடி பணம் வாங்கி விட்டு 2 பேர் நிலத்தை எழுதிக் கொடுக்காமல் இருந்துள்ளனர்.
இதுகுறித்து சிவகுரு குற்றாலம் நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலுவிடம் (55) புகார் கொடுத்தார். இந்த புகாரில் தீர்வு கண்டால் தனக்கு ரூ.10 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்று சிவகுரு குற்றாலத்திடம், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் கூறியதாக தெரிகிறது.
துணை போலீஸ் சூப்பிரண்டு கைது
இதற்கிடையே சம்பந்தப்பட்ட நிலத்தை சிவகுரு குற்றாலத்துக்கே பணம் வாங்கியவர்கள் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. எனினும் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் ரூ.5 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என சிவகுரு குற்றாலத்திடம் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. ஆனால் பணம் கொடுக்க மனமில்லாத அவர் இதுதொடர்பாக நாகர்கோவிலில் உள்ள லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர்பாலிடம் புகார் செய்தார். இதையடுத்து அவருடைய ஆலோசனையின் பேரில் சிவகுரு குற்றாலம் ரூ.5 லட்சத்தை நேற்று முன்தினம் மாலை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று தங்கவேலுவிடம் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்கவேலுவை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
வீட்டில் ரூ.5 லட்சம் சிக்கியது
பின்னர் இதுதொடர்பாக தங்கவேலுவிடம் மாலை 6.30 மணிக்கு தொடங்கிய விசாரணை நேற்று அதிகாலை 3 மணி வரை நடந்தது. இதற்கிடையே ராமன்புதூர் சந்திப்பில் உள்ள தங்கவேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது.
அப்போது வீட்டிலும் கணக்கில் வராத ரூ.5 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலுவிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டனர். ஆனால் அவர் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. தனது நண்பரிடம் வாங்கியதாக கூறியுள்ளார். ஆனால் அந்த நண்பர் யார்? என்ற விவரங்களை அவர் கூறவில்லை. மேலும் அவரது வீட்டில் 35 வயது பெண் ஒருவரும் இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அந்த பெண், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலுவின் உறவுக்கார பெண் என்று கூறியுள்ளார்.
சிறையில் அடைப்பு
இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகர்கோவிலில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டில் தங்கவேலுவை ஆஜர்படுத்தினர். அவரை 20-ந் தேதி வரை ஜெயிலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி அவர் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
----
Related Tags :
Next Story