கனரக வாகனங்கள் செல்ல தடை
விழுப்புரம் திரு.வி.க., காமராஜர் வீதிகள் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநிலத்தில் இருந்து வந்த கன்டெய்னர் லாரி மோதியதில் தந்தை பெரியாரின் சிலை உடைந்து முற்றிலும் சேதமடைந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதுபோல் வடமாநில கன்டெய்னர் லாரி, விழுப்புரம் திரு.வி.க. வீதியில் இருந்து நேருஜி சாலையில் திரும்ப முயன்றபோது அங்குள்ள காந்தி சிலை மீது மோதுவதுபோல் வந்தது. உடனே அங்கிருந்த பொதுமக்கள், சத்தம்போடவே சுதாரித்துக்கொண்ட டிரைவர், சிலை மீது மோதாமல் சாதுர்யமாக லாரியை திருப்பினர். வடமாநில டிரைவர்கள் கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டு தவறான பாதையில் விழுப்புரம் காமராஜர் வீதி, திரு.வி.க. வீதிக்குள் வந்து திரும்புவதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது.
மேலும் விழுப்புரம் காந்தி சிலை பகுதி, திரு.வி.க. வீதி, காமராஜர் வீதி ஆகிய இடங்களில் பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட பொதுமக்கள் கூட்டம் எப்போதும் மிகுந்து காணப்படும். இவ்வாறு மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய பகுதியாக திகழும் இப்பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் நேற்று முதல் கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். இதையொட்டி அப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை என்ற அறிவிக்கும் வகையில் விளம்பர பதாகை வைத்து பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் கண்காணித்தனர்.
Related Tags :
Next Story