தேங்காய்நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


தேங்காய்நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 6 April 2022 11:13 PM IST (Updated: 6 April 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே தேங்காய்நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து நாசமானது.

மரக்காணம், 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மண்டவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 49). இவர் தனது வீட்டின் அருகில் தேங்காய் நாரில் இருந்து பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். 
இந்த தொழிற்சாலையில் மரக்காணம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை 4.30 மணியளவில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டு இருந்துள்ளனர்.

தீப்பற்றி எரிந்தது

அப்போது எதிர்பாராத விதமாக தொழிற்சாலை அருகில் உள்ள மின்மாற்றியில் இருந்து தீப்பொறிகள் சிதறியது. இது தொழிற்சாலையில் குவியல் குவியலாக வைக்கப்பட்டிருந்த தேங்காய்நார் மீது விழுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் தேங்காய் நார்கள் தீப்பற்றி எரிந்தது. 
இதை பார்த்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதையடுத்து உயிர்பிழைத்தால் போதும் என்று தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடி தப்பித்தனர்.

வாகனங்கள் நாசம்

சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. தொழிற்சாலை அருகே நிறுத்தி வைத்திருந்த 2 லாரிகள், ஒரு மினி டெம்போ மற்றும் தேங்காய் பஞ்சு உற்பத்தி செய்யும் எந்திரங்கள் எரிந்து தீக்கிரையானது. தீ விபத்தால் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. 
இந்த பயங்கர தீ விபத்து பற்றி மரக்காணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

ரூ.65 லட்சம் சேதம்

இந்த தீ விபத்தில் வாகனங்கள், எந்திரங்கள், தேங்காய் நார் என சுமார் ரூ.65 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story