ஜோலார்பேட்டை பகுதியில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை. வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதம்
ஜோலார்பேட்டை பகுதியில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை பகுதியில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
கொளுத்தும் வெயில்
திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தில் கோடை தொடங்கும் முன்னரே அனல் பறக்கும் அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். கொடூர வெயிலின் தாக்கத்தால் அனல் காற்று வீசுகிறது. இதனால் பகலில் வெளியில் செல்லவே பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
நேற்று காலையும் வெயில் கொளுத்த தொடங்கியது. இந்த நிலையில் மதியத்துக்கு மேல் ஜோலார்பேட்டை ஏலகிரி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தது.
ஆலங்கட்டி மழை
பிற்பகல் 3 மணி அளவில் இடி-மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. அப்போது சூறைக்காற்று சுழன்று சுழன்று வீசியது.
அதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தன.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகிலும் திருப்பத்தூர் பாதையில் மரம் ஒன்று தண்டவாளத்தில் முறிந்து விழுந்தது. அப்போது சென்னையிலிருந்து மங்களூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 4.35 மணியளவில் ஜோலார்பேட்டையை வந்தடைந்தது.
சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் 4.35 மணிக்கு ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வந்து நின்றது. அந்த ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தண்டவாள பகுதியில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஒரு மணி நேரம் போராடி அகற்றினர். அதன்பின் ஒரு மணி நேரம் தாமதமாக 5.35 மணிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ஒரு மணி நேரத்தில் ஜோலார்பேட்டை மார்க்கமாக வேறு எந்த ரயிலும் வராததால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
மேற்கூரைகள் பறந்தன
மழையின்போது வீசிய சூறாவளி காற்றின் காரணமாக ஜோலார்பேட்டை, சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரையும் பெயர்ந்து கீழே விழுந்தது.
அதன் காரணமாக நேற்று மாலை 3 மணி முதல் இரவு வரை மின்சாரம் தடைபட்டது. இரவும் பல மணி நேரம் மின்சாரம் வராததால் ஜோலார்பேட்டை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகள் இருளில் மூழ்கின. மின் ஊழியர்கள் மின்வினியோக பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும் 10 மணிக்கு பின்னரும் மின்தடை நீடித்தது. மேலும் சாலையில் முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியும் தீவிரமாக நடந்தது.
திருப்பத்தூர் ஆசிரியர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது வெப்பம் தணிந்து இரவில் காற்று வீசியது. இந்த மழையால் சில பாதிப்புகள் இருந்தாலும் 4 மாதங்களுக்கு பிறகு பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story