பகவதி அம்மன் கோவிலில் கிடாவெட்டு நிகழ்ச்சி

பகவதி அம்மன் கோவிலில் கிடாவெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
நொய்யல்,
புன்னம் சத்திரம் அருகே பாண்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி கடந்த 3-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், வடி சோறு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 4-ந் தேதி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி மேளதாளங்கள் முழங்க தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று முன்தினம் மாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். அன்று இரவு அப்பகுதி பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மன் முன் படையல் போட்டனர். அதன் பின்னர் பெண்கள் மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வந்து அம்மன் முன் வைத்து பூஜை செய்தனர். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலை அம்மன் திருவீதியுலா, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story






