நாமக்கல்லில் அரசு விடுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு


நாமக்கல்லில் அரசு விடுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 7 April 2022 12:02 AM IST (Updated: 7 April 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அரசு விடுதிகளில் நேற்று முன்தினம் இரவு கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்:
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் நகரில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவ, மாணவிகள் விடுதிகளில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று முன்தினம் இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் காந்திநகரில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த கலெக்டர், மாணவிகளுக்காக சமைக்கப்பட்ட உணவின் தரத்தை ருசி பார்த்தார். விடுதியில் மாணவிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும் சமையலறை சுகாதாரமான முறையில் உள்ளதா? என்றும் சமையலறையில் மாவு அரைப்பதற்கான எந்திரம் நல்ல நிலையில் உள்ளதா? என்றும், மின்விசிறி, மின்விளக்கு ஆகியவை சரியாக இயங்குகின்றனவா? என்றும் ஆய்வு செய்தார். கழிப்பிடங்கள், குளியலறை ஆகியவை சுத்தமாக உள்ளதா? என்றும், கைகழுவுவதற்கும், துணி துவைப்பதற்கும் தேவையான வசதிகள் உள்ளதா? எனவும் பார்வையிட்டார்.
ஆண்கள் விடுதி
தொடர்ந்து நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி, அரசு பழங்குடியினர் நல மாணவர் விடுதி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மாணவர்களிடம் உணவு நன்றாக உள்ளதா? என்றும், விடுதியில் கல்வி கற்பது குறித்தும், அவர்களது கோரிக்கைகள், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் உணர்ந்து, தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது விடுதி காப்பாளர்கள், சமையலர்கள் உடன் இருந்தனர்.

Next Story