கரூரில் புகையிலை பொருட்களை விற்ற 8 கடைகளுக்கு சீல்


கரூரில் புகையிலை பொருட்களை விற்ற 8 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 7 April 2022 12:05 AM IST (Updated: 7 April 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்ற 8 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கரூர், 
அதிரடி சோதனை
கரூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வெங்கமேடு, வெள்ளியணை, லாலாபேட்டை, புன்னம், பஞ்சப்பட்டி, குளித்தலை உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
கரூர் ஜவகர் பஜாரில் உள்ள மளிகைக்கடை மற்றும் வெண்ணைமலையில் உள்ள ஒரு மளிகை கடை, டீக்கடை உள்ளிட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கடைகளுக்கு நேரில் சென்று கடை உரிமையாளர்களை எச்சரித்து அந்த கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும் உழவர்சந்தை அருகே உள்ள மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடையிலும் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
8 கடைகளுக்கு சீல்
அண்மையில் நடைபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஆய்வு கூட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே புகையிலை, குட்கா போன்ற போதை பொருட்கள் பயன்பாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து எந்தெந்த கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து தகவல்களை தலைமை ஆசிரியரிடம் இருந்து பெறப்பட்டு கரூர் மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் பல்வேறு கடைகளில் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 7½ கிலோ எடையுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதை விற்பனை செய்த 8 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அவர்களின் உரிமைகளை ரத்து செய்வதற்கும், கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் இதுபோன்ற பொருட்களை விற்கக்கூடாது. இதனை மீறி விற்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story