ஊருக்குள் சிங்கம் புகுந்ததாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட மர்ம நபர்
ஊருக்குள் சிங்கம் புகுந்ததாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் அருகே மாவடிப்பாளையம் கிராமத்தில் உள்ள ஒருவரது விளை நிலத்தின் வழியாக நேற்று முன்தினம் இரவு ஊருக்குள் சிங்கம் ஒன்று புகுந்ததாக தகவல் பரவியது. மேலும் சிங்கம் கர்ஜித்தபடி விளை நிலத்தின் வழியாக நடந்து செல்வது போன்ற வீடியோ, முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர். மேலும் இதுபற்றி வனத்துறை மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலூர் மாவட்ட வன அலுவலர் செல்வம் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் நேற்று காலை மாவடிப்பாளையத்திற்கு விரைந்து சென்று, அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த வீடியோவை சோதனை செய்தபோது அது கடந்த ஆண்டு மார்ச் மாதம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் சிங்கம் புகுந்த வீடியோ என்பதும், அதனை யாரோ மர்மநபர் பொதுமக்களிடையே வதந்தி பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டதும் தெரியவந்தது.
இதற்கிடையே கடலூர் போலீசார், சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பிய நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சிங்கம் ஊருக்குள் புகுந்ததாக கூறப்பட்ட செய்தி, வதந்தி என்பதை அறிந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story