அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
குண்டம் விழா
அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் குண்டம் திருவிழா தொடங்கியது. இதனைத்தொடர்ந்து 23-ந் தேதி மகிஷாசுரமர்த்தினியை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கொடியேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து உற்சவ அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்ட தேர்களில் வைக்கப்பட்டு பல்வேறு வாகனங்களில் தினமும் வீதி உலா வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணி அளவில் செலம்பூர் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் அந்தியூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் இருந்து குதிரையை செலம்பூர் அம்மனாக பாவித்து அலங்காரம் செய்து மேளதாளங்கள் முழங்க அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
தீ மிதித்தனர்
அப்போது வீதிகள் தோறும் பக்தர்கள் தேங்காய்-பழம் வைத்து படைத்து வழிபட்டனர். பின்னர் காலை 7.30 மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக 60 அடி நீளத்துக்கு குண்டம் தயார் செய்யப்பட்டிருந்தது. இதில் பூசாரி முதலில் குண்டத்துக்கு பூஜைகள் செய்து தீ மிதித்து தொடங்கி வைத்தார்.
அவரை தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்தபடி, கையில் பிரம்பு வைத்துக்கொண்டு பயபக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். ஒரு சில பக்தர்கள் தங்களது கைக்குழந்தையுடன் தீ மிதித்தனர்.
அலகு குத்தி வந்தனர்
திருவிழாவையொட்டி பத்ரகாளியம்மனுக்கு வெள்ளை நிற பட்டு உடுத்தி வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தவுட்டுப்பாளையம் அழகு முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக வந்தனர்.
அதேபோல அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்தும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி கொண்டு கோவிலுக்கு வந்தனர். இதையொட்டி பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பாதுகாப்பு
கோபி ஆர்.டி.ஓ பழனி தேவி, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் இந்து அறநிலையத்துறையினர் திருவிழாவில் கலந்து கொண்டனர். போக்குவரத்து போலீசார், தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜ் தலைமையில் தீயணைப்பு வாகனம் குண்டம் நடைபெறக் கூடிய இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை 4 நாட்கள் தேரோட்டம் நடைபெறும். இதற்காக 60 அடி உயரம் கொண்ட தேர் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் பக்தர்கள் மாலை நேரத்தில் பக்தி பாடல் பாடிக் கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்வார்கள்.
12-ந் தேதி பாரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந் தேதி நடக்கும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைகிறது. திருவிழாவில் அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், பர்கூர், பவானி, கவுந்தப்பாடி, ஈரோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






