நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணி


நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணி
x
தினத்தந்தி 7 April 2022 3:11 AM IST (Updated: 7 April 2022 3:11 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

நெல்லை:
நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் பல இடங்களில் குப்பைகள் சுகாதாரமற்ற முறையில் கிடந்தது. இதை அகற்ற பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து தூய்மை திட்டத்தின் கீழ் நேற்று ‘நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ என்ற தூய்மை திட்டத்தினை கலெக்டர் விஷ்ணு நேற்று தொடங்கி வைத்து அங்கு நடந்த தூய்மை பணியையும் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் ‘நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ என்ற திட்டத்தில் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தூய்மையாக பராமரிப்பதற்கு வருகிற 30-ந் தேதி வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், சுகாதார நிலையங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

மருத்துவமனைக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரவேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வருபவர்கள், குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியில் மட்டுமே குப்பைகளை போட்டு மருத்துவமனையை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களின் பங்கு  மிகவும்   மகத்தானதாகும். கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து தொழிலாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை மக்க வைத்து உரமாக்கும் திட்டம் மற்றும் மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மருத்துவமனைக்கு வருபவர்கள் மருத்துவமனையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். இதனை மருத்துவமனை பணியாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story