சாத்தூரில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்


சாத்தூரில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்
x
தினத்தந்தி 7 April 2022 3:20 AM IST (Updated: 7 April 2022 3:20 AM IST)
t-max-icont-min-icon

மூலப்பொருட்கள், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பெட்டி தொழிற்சாலைகள் நேற்று முதல் மூடப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

சாத்தூர், 
மூலப்பொருட்கள், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பெட்டி தொழிற்சாலைகள் நேற்று முதல் மூடப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.
விலை உயர்வு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதாலும், டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை உயர்ந்ததாலும் தீப்பெட்டிக்கான உற்பத்தி செலவு அதிகரித்தது.
இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் 600 தீப்பெட்டி கொண்ட பண்டல் ஒன்றுக்கு ரூ.50 விலை உயர்த்தினர். ஆனால், இதை தீப்பெட்டி விற்பனையாளர்கள், வியாபாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து மூலப்பொருட்கள், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் 6-ந் தேதி (நேற்று) முதல் வருகிற 17-ந் தேதி வரை தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படும் என்று அறிவித்தனர்.
தொழிற்சாலைகள் மூடல்
அதன்படி, நேற்று தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம் மற்றும் இளையரசனேந்தல், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட முழு நேர எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள், 300-க்கும் மேற்பட்ட பகுதி எந்திர தொழிற்சாலைகள், 2,500-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி அடைப்பு ஜாப் ஒர்க் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
இந்த தொழிற்சாலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். இதில் 90 சதவீதம் பெண்கள் ஆவார்கள். தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும், வேலை நிறுத்தம் காரணமாக தினமும் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சாத்தூர்
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 70-க்கும் மேற்பட்ட எந்திரங்களை கொண்டு இயங்கும் பெரிய அளவிலான தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. எந்திரங்களை  கொண்டு இயங்கும் தீப்பெட்டி ஆலைகள் மூடி இருப்பதால் அதனை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட சிறு தீப்பெட்டி ஆலைகளும் வேலை இழந்துள்ளன. வருகிற 17-ந் தேதி வரை தீப்பெட்டி ஆலையை மூடி போராட்டத்தில் ஈடுபட போவதாக தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 
இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தின் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார்.

Next Story