ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவட்டார்:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆதிகேசவ பெருமாள் கோவில்
108 வைணவ திருப்பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்டதுமான பிரதித்தி பெற்ற திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது.
கொடியேற்ற நிகழ்ச்சி காலையில் திருப்பள்ளியுணர்த்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து பாலாலயத்தில் அருள்பாலிக்கும் ஆதிகேசவப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
கொடியேற்றம்
கொடியேற்றத்துக்கான கயிறு ஆற்றூர் பள்ளிக்குழிவிளை தர்மசாஸ்தா ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்பட்டது. அதற்கு மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கர நாராயணரு பூஜைகள் செய்து, மேளதாளம் முழங்க, பெண்கள் குலவையிட கொடிமரத்தில் கருடன் இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றினார். அப்போது பக்தர்கள் “நாராயணா நாராயண” என்று கோஷம் எழுப்பினர்.
கொடியேற்று நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் ஆனந்தன், மேலாளர் மோகன் குமார், திருவட்டார் பேரூராட்சி தலைவி பெனிலா ரமேஷ், ஒருங்கிணைந்த ஆதிகேசவா பக்தர் சங்கத்தினர் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வாகன பவனி
இரவு ராமாயண பாராயணம், சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடைபெற்றது.
இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு நாராயணீய பாராயணம், 11 மணிக்கு சாமி பவனி, மாலை 6 மணிக்கு விப்ர நாராயண ராமானுஜதாசன் வழங்கும் ஆன்மிக சொற்பொழிவு, இரவு 10 மணிக்கு ருக்மணி சுயம்வரம் கதகளி ஆகியவை நடக்கிறது.
பள்ளிவேட்டை
10-ந்தேதி இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் கோவிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது. 13.ந்தேதி இரவு 10 மணிக்கு சிறப்பு நடிகர்கள் பங்கேற்கும் துரியோதன வதம் கதகளி நடக்கிறது.
14-ந்தேதி காலை 11 மணிக்கு சாமி பவனி வருதல், இரவு 9.30 மணிக்கு கருட வாகனத்தில் சாமி பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், 15-ந்தேதி காலை 11 மணிக்கு சாமி பவனி வருதல், மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரம் அரச குடும்ப பிரதிநிதி, கதகளி கலைஞர் முன் செல்ல துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதையுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேள தாளத்துடன், ஆதிகேசவபெருமாளும், கிருஷ்ண சாமியும் பக்தர்கள் புடை சூழ ஆராட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
தினமும் காலையும், மாலையும் சாமி பவனி, ராமாயண பாராயணம், கதகளி ஆகியவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story