அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம்
அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என்று ஊட்டியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பணியாளர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
ஊட்டி
அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என்று ஊட்டியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பணியாளர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆய்வு கூட்டம்
நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், அங்கன்வாடி மைய பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசியதாவது:-
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை பாதுகாக்க அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் அனைவரும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் இறப்பு நடைபெறாத வகையில் கவனமாக பணியாற்ற வேண்டும்.
டாக்டர்களிடம் பரிந்துரை
பழங்குடியினர் இடையே இளம் வயது திருமணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து கற்றுக்கொடுக்க வேண்டும். குள்ளத்தன்மை, கடுமையாக எடை குறைவு உள்ள குழந்தைகள் அனைவரையும் ஆரம்ப சுகாதார டாக்டர்களிடம் பரிந்துரை செய்து தொடர்ந்து நன்முறையில் கவனிக்க வேண்டும். ரத்த சோகை பற்றி பள்ளி குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டிய தாய்மார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை, மருந்து வழங்க வேண்டும்.
ஊட்டச்சத்து பெட்டகம்
எடை குறைவான கர்ப்பிணிகள், வளரிளம் பெண்கள், குழந்தைகளுக்கு இரும்பு சத்து, புரத சத்துக்கள் அடங்கிய 10 வகையான பொருட்கள் கொண்ட ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி, அதனை தினசரி உணவில் சேர்த்து கொள்வதன் அவசியம் குறித்து அறிவுறுத்த வேண்டும்.
அனைத்து மையங்களிலும் காய்கறி தோட்டம் பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அங்கன்வாடி பணியாளர்களுக்கு எலுமிச்சை, மாதுளை, கறிவேப்பிலை, முருங்கை ஆகிய நாற்றுகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகங்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story