மத்திய பஸ் நிலைய மேற்கூரை பெயர்ந்து விழுந்தது


மத்திய பஸ் நிலைய மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
x
தினத்தந்தி 7 April 2022 7:14 PM IST (Updated: 7 April 2022 7:14 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி மத்திய பஸ் நிலைய மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஊட்டி

ஊட்டி மத்திய பஸ் நிலைய மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மத்திய பஸ் நிலையம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து 300-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் 120 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலைய வளாகம் குண்டும், குழியுமாக காணப்பட்டதோடு, மழைநீர் தேங்கியதால் சேறும், சகதியுமாக மாறியது. 

இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். இதையடுத்து பஸ் நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ரூ.2 கோடி செலவில் மத்திய பஸ் நிலையம் பல்வேறு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டது. வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டது. மேற்கூரை அழகுபடுத்தப்பட்டு, நான்குபுறமும் கடிகாரங்கள் அமைக்கப்பட்டது.

பெயர்ந்து விழுந்தது

இது தவிர உள்பகுதியில் பயணிகள் அமர இருக்கைகள் போடப்பட்டு, அந்த தளம் உயர்த்தப்பட்டது. மேலும் பெண்கள் காத்திருப்பு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, போலீஸ் உதவி மையம், வெளிமாநில பஸ் போக்குவரத்துக்கான முன்பதிவு மையம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கிடையே பயணிகள் காத்திருக்கும் பகுதிக்கு மேல் பொருத்தப்பட்ட மேற்கூரையில் ஆங்காங்கே பெயர்ந்து காணப்பட்டது.  இந்த நிலையில் அந்த மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் வெளியிடங்களுக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மீது விழும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பெயர்ந்த மேற்கூரை உள்பட அனைத்து மேற்கூரைகளையும் அகற்றும் பணி நடந்து வருகிறது. கீழே பரவி கிடந்த மேற்கூரைகளை தொழிலாளர்கள் அப்புறப்படுத்தி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

புதிய மேற்கூரை

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ஊட்டி மத்திய பஸ் நிலையம் சீரமைக்கப்பட்டு 2 ஆண்டுகள் முடிவதற்குள் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தரமில்லாத மேற்கூரை அமைத்ததால் இந்த சம்பவம் நடந்தது. அரசின் பணம் வீணாகி உள்ளது. தரமான மேற்கூரை அமைக்க வேண்டும் என்றனர். 

போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, பெயர்ந்த மற்றும் அகற்றப்பட்ட மேற்கூரைக்கு பதிலாக புதிதாக மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story