பழங்குடியின மக்களுக்கான வீடுகள் கட்டும் பணி முடக்கம்
போடி அருகே முதுவார்குடி மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான இலவச வீடுகள் கட்டும் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.
தேனி:
பழங்குடியினர் கிராமம்
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் முதுவார்குடி பழங்குடியினர் கிராமம் உள்ளது. இந்த கிராமம் கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்டது. இந்த கிராமத்துக்கு சாலை வசதி கிடையாது. கரடு, முரடான மலைப்பாதையில் மக்கள் நடந்தும், ஆபத்தான மலைப்பாதையில் உயிரை பணயம் வைத்து ஜீப்பிலும் பயணம் செய்து வருகின்றனர். இங்கு 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்து ஒழுகும் நிலையில் இருந்தன.
இதனால், 2020-2021-ம் நிதியாண்டில் போடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளை பராமரிப்பு செய்ய டெண்டர் விடப்பட்டது. 14 வீடுகளில் பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில், ஓரிரு வீடுகளில் மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மற்ற பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.
முடங்கிய பணிகள்
அதுபோல், முதல்-அமைச்சரின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் தொடங்கி அஸ்திவாரம் போடப்பட்ட நிலையிலும், அரைகுறையாக சுவர் எழுப்பப்பட்ட நிலையிலும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணிகள் முடங்கியதால், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்ட சில இடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கின்றன.
புதிய வீடுகள் கட்டும் பணிக்காக மக்கள் வசித்த பழைய வீடுகள் அகற்றப்பட்டன. பல மாதங்களாக பணிகள் முடங்கிக் கிடப்பதால், இருந்த வீடுகளையும் இழந்துவிட்டு மலைப்பகுதிகளில் வாழ வழியின்றி நிர்க்கதியாக நிற்கும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் அப்பகுதிகளில் தற்காலிகமாக குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர்.
கலெக்டர் வர வேண்டும்
இதுகுறித்து முதுவார்குடி பழங்குடியின மக்கள் சிலரிடம் கேட்டபோது, "புதிய வீடு கட்டித் தருகிறோம் என்று கூறி பழைய வீடுகளை இடிக்கச் சொன்னார்கள். சேதம் அடைந்த பழைய வீடுகளை இடித்து விட்டோம். ஆனால், புதிய வீடுகள் கட்டும் பணியை அரைகுறையாக நிறுத்திவிட்டார்கள். முதலில் எங்களை மணல் கொண்டு வருமாறு வற்புறுத்தினார்கள். எங்களால் மணல் கொண்டு வர முடியாத நிலையில், இந்த ஊருக்கு சாலை அமைத்த பிறகு தான் வீடு கட்ட முடியும் என்று கைவிரித்து விட்டார்கள்.
இதுதொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம். மனு கொடுத்த பிறகு 2 நாட்கள் மட்டும் கட்டுமான பணிகள் நடந்தன. அதன்பிறகு பணிகள் நடக்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் எங்கள் கிராமத்துக்கு நேரில் வந்து எங்களின் அவல நிலைமையை பார்வையிட்டு முடங்கிக் கிடக்கும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
Related Tags :
Next Story