நாமக்கல்லில் இருந்து பள்ளிகளுக்கு விடைத்தாள்கள் அனுப்பும் பணி தொடங்கியது
நாமக்கல்லில் இருந்து பள்ளிகளுக்கு விடைத்தாள்கள் அனுப்பும் பணி தொடங்கியது
நாமக்கல்:
நாமக்கல்லில் இருந்து 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 விடைத்தாள்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கி உள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடைகிறது. இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மே மாதம் 6-ந் தேதி தொடங்கி 30-ந் தேதியும், பிளஸ்-1 பொதுத்தேர்வு மே மாதம் 9-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 20,662 மாணவ, மாணவிகளும், பிளஸ்-1 பொதுத்தேர்வை 19,842 பேரும், பிளஸ்-2 பொதுத்தேர்வை 19,866 பேரும் எழுத உள்ளனர். இவர்களுக்கான செய்முறை தேர்வு இந்த மாதம் 3-வது வாரம் தொடங்குகிறது.
விடைத்தாள்கள் அனுப்பும் பணி
இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் சென்னை தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு வந்துள்ளது. விடைத்தாள்கள் தேர்வு மையம் வாரியாக பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. தேர்வுத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விடைத்தாள்கள் வழங்கப்பட்டது.
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பிளஸ்- 2 விடைத்தாள்களும், மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து 10-ம் வகுப்பு விடைத்தாள்களும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. பிளஸ்-2 தேர்வை பொறுத்தவரையில் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டிலும் 80 மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இவற்றில் 4 மையங்களில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருப்பதால் அவற்றை பிரிக்கவும் பரிசீலனை இருந்து வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story