போர் கப்பலுக்காக பணம் வசூலித்து மோசடி-கிரித் சோமையா மீது வழக்குப்பதிவு
போர் கப்பலை காப்பாற்றுவதாக பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.பி. கிரித் சோமையா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மும்பை,
போர் கப்பலை காப்பாற்றுவதாக பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.பி. கிரித் சோமையா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
போர் கப்பல் நிதி வசூல்
ஐ.என்.ஸ். விக்ராந்த் போர் கப்பல் கடந்த 2014-ம் ஆண்டு ஏலத்தில் விடப்பட்டது. முன்னதாக இந்த கப்பலை பாதுகாக்க பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா பொது மக்களிடம் நிதி திரட்டினார். போர் கப்பலை பாதுகாக்க வசூலித்த ரூ.57 கோடியை கிரித் சோமையா மோசடி செய்துவிட்டதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று குற்றம் சாட்டி இருந்தார்.
இந்தநிலையில் கிரித் சோமையா மீது முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் டிராம்பே போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
வழக்குப்பதிவு
அந்த புகாரில், " ஐ.என்.எஸ். விக்ராந்த்தை பாதுகாக்க கிரித் சோமையா நன்கொடை வசூலித்தார். போர் கப்பலை பாதுகாக்க நானும், அவரிடம் நன்கொடை வழங்கினேன். போர் கப்பலை பாதுகாப்பதாக கிரித் சோமையா ரூ.57 கோடிக்கு மேல் பணம் வசூலித்தார். அந்த பணத்தை மாநில கவர்னர் செயலாளர் அலுவலகத்தில் செலுத்தாமல், கிரித் சோமையா மோசடி செய்துவிட்டார். " என கூறியிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் கிரித் சோமையா மற்றும் அவரது மகன் நீல் சோமையா உள்ளிட்டவர்கள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story