கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு தரமற்ற சாக்லேட் விற்றால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை
கொடைக்கானலில், சுற்றுலா பயணிகளுக்கு தரமற்ற சாக்லேட் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொடைக்கானல்:
ஆலோசனை கூட்டம்
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவுகிறது. இதனை அனுபவிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகள், இங்கு தயாரிக்கப்படுகிற ஹோம்மேடு சாக்லேட்களை விரும்பி வாங்கி செல்வது வழக்கம்.
இதனையடுத்து ஹோம்மேடு சாக்லேட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளுடன் உணவு பாதுகாப்பு துறையினர் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கொடைக்கானல் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
கூட்டத்துக்கு கொடைக்கானல் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் லாரன்ஸ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யக்கூடிய டீத்தூள், நறுமண பொருட்கள் மற்றும் சாக்லேட் பாக்கெட்டுகளில் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியான தேதி கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
கண்ணாடி பெட்டிக்குள் வைத்திருக்கும் ஹோம்மேடு சாக்லேட்களின் காலாவதியான தேதி குறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டியிருக்க வேண்டும். தயாரிக்கக்கூடிய உணவு பொருட்களின் மூலப்பொருட்களின் விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
கடும் நடவடிக்கை
சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யக்கூடிய உணவு பொருட்கள் தரமாக இருக்க வேண்டும். விற்பனை செய்யக்கூடிய பொருட்களுக்கு வழங்கப்படும் ரசீதில் உணவு பாதுகாப்பு விற்பனை உரிமம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு தரமற்ற சாக்லேட்கள் மற்றும் காலாவதியான சாக்லேட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்ட முடிவில் உணவில் உப்பு, சர்க்கரை, எண்ணெய் அளவை குறைப்போம் என்று வியாபாரிகளும், சாக்லேட் தயாரிப்பாளர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
Related Tags :
Next Story