ஓட்டப்பிடாரம் அருகே கிராம மக்கள் திடீர் சாலைமறியல் உயர்அழுத்த மின்சாரத்துக்கு கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு
உயர்அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே, உயர்அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.
மின்கம்பம் அமைக்கும் பணி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் செயல்படும் தனியார் கல்குவாரி நிறுவனத்திற்காக உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்வதற்காக, பசுவந்தனையில் இருந்து தீத்தம்பட்டி, கோவிந்தம்பட்டி மற்றும் வடக்கு வண்டானம் கிராமங்கள் வழியாக மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் கோவிந்தம்பட்டி கிராமத்தின் வழியாக உயர்அழுத்த மின்சாரம் கொண்டு செல்வதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் போன்ற இடங்கள் வழியாக கொண்டு செல்லாமல் மாற்று வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்று ஏற்கனவே அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சாலைமறியல்
ஆனால் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெறுவதாக கூறி, ஆத்திரமடைந்த மக்கள் கோவில்பட்டி - பசுவந்தனை சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊருக்குள் வழியாக உயர்அழுத்த மின்சாரத்தை கொண்டு செல்லாமல் மாற்று வழியில் கொண்டு செல்ல வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பசுவந்தனை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். கோவில்பட்டி சப்-கலெக்டர் சங்கரநாராயணன், மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், கயத்தாறு தாசில்தார் பேச்சிமுத்து ஆகியோரும் அங்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவது மட்டுமின்றி, இப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினர் இடையே பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று உறுதியளித்தை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story