வேலூர் பழைய பஸ்நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிளாட்பாரங்கள் இடித்து அகற்றம்
வேலூர் பழைய பஸ்நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிளாட்பாரங்கள் இடித்து அகற்றப்பட்டது.
வேலூர்
வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்களும், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு புறநகர் பஸ்களும், தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்நிலையத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாநகராட்சி மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் கடந்த வாரம் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தும்படி கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் அவர் அரசு, தனியார் பஸ் டிரைவர்களை கண்டித்தார். பர்மா பஜாரின் எதிரே மாநகராட்சி நினைவுத்தூண் அருகே பஸ்கள் வரிசையாக நிறுத்துவதற்கு அமைக்கப்பட்டிருந்த பிளாட்பாரங்களை அகற்ற வேண்டும். இதன்மூலம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இந்த நிலையில் வேலூர் பழைய பஸ்நிலையம் மாநகராட்சி நினைவுத்தூண் அருகே உள்ள பிளாட்பாரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நேற்று நடந்தது. மாநகராட்சி நினைவுத்தூண் பின்பகுதியின் வழியாக பஸ்கள் உள்ளே வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்மூலம் பர்மா பஜார் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறையும். மாநகராட்சி நினைவுத்தூண் அருகே இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை தாறுமாறாக நிறுத்தக்கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story