முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட 606 பேர் கைது


முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட 606 பேர் கைது
x
தினத்தந்தி 7 April 2022 10:29 PM IST (Updated: 7 April 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. அரசை கண்டித்து விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட 606 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீஸ் வேனை அ.தி.மு.க.வினர் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. ஆட்சியை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து, பெண்களுக்கு எதிரான கூட்டு பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு, வரலாறு காணாத வகையில் சொத்து வரி உயர்வு இவற்றை கண்டித்தும், இதற்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்தும் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ் ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசினர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

சி.வி.சண்முகம் கைது

இந்த உண்ணாவிரத போராட்டம் காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது. நேரம் செல்ல, செல்ல மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தனர். இந்த போராட்டம் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் காலை 8 மணியில் இருந்து போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்நிலையில் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாகவும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூணன் உள்பட 606 பேரை பகல் 12.30 மணியளவில் போலீசார் கைது செய்து போலீஸ் வேன்கள் மற்றும் தனியார் பஸ்களில் ஏற்றினர். 

போலீஸ் வேன் சிறைபிடிப்பு 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர், சி.வி.சண்முகத்தை கைது செய்த போலீசாரை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர். மேலும் சி.வி.சண்முகத்தை கைது செய்து ஏற்றிய வேனை அங்கிருந்து செல்ல விடாமல் அ.தி.மு.க. தொண்டர்கள் அந்த வேனை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது போலீசாருடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு போலீசாருக்கும் அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. உடனே போலீஸ் வேனில் இருந்தபடியே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஒலிப்பெருக்கி மூலம் பேசுகையில், மக்கள் பிரச்சினையை நாம் அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் தி.மு.க. அரசுக்கு வெளிப்படுத்தி விட்டோம். ஆகவே யாரும் எந்தவித பிரச்சினையிலும் ஈடுபடக்கூடாது, போலீஸ் வேனை மறிக்கக்கூடாது. அனைவரும் இங்கிருந்து அமைதியாக கலைந்து செல்லுங்கள் என்றார். இதையடுத்து அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். பின்னர் கைதான அனைவரையும் விழுப்புரத்தில் உள்ள 2 திருமண மண்டபங்களில் போலீசார் தங்க வைத்தனர். அ.தி.மு.க.வினரின் உண்ணாவிரத போராட்டத்தினால் மதியம் 1 மணிக்கு பிறகே நகரில் போக்குவரத்து நெரிசல் சீரானது. கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.  

Next Story