ரூ.1 கோடி வைரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்பு
ரூ.1 கோடி வைரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் போலீசார் கைப்பற்றிய ரூ.1 கோடி மதிப்பிலான வைரத்தை உரிய ஆவணத்தை காட்டி பெற்று செல்ல யாரும் வராததால் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வைரம்
ராமநாதபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையில் 160 கிராம் எடையுள்ள பட்டைதீட்டப்படாத வைரக்கற்கள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கீழக்கரை புது கிழக்குத்தெரு முகம்மது காசிம் மகன் யூசுப் சுலைமான் (வயது36) என்பவரை பிடித்து விசாரித்தபோது தான் ஒரு வியாபாரி என்றும் உரிய ஆவணம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குபதிவு செய்தனர். அதன்பிறகு அவர் உரிய ஆவணத்துடன் வரவில்லை.
இந்நிலையில் இந்த வைரக்கற்களை சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தபோது சுங்கத்துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்து வைரம் தான் என்றும் ஆனால் அதிக விலைமதிக்கத்தக்க வைரம் இல்லை என்றும் தெரிவித்தனர். மேலும், கடல்பகுதியில் வைத்து பறிமுதல் செய்தால்தான் தாங்கள் பெற்றுச்சென்று விசாரணை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒப்படைப்பு
மேலும், ரெயில்வே கேட் பகுதியில் வைத்து கைப்பற்றியதால் தங்கள் கட்டுப்பாட்டில் வராது என்றும், கடல்வழியாக கடத்தி வந்ததாக வழக்குபதிவு செய்து தந்தால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே விலை உயர்ந்த வைரக்கற்கள் என்பதாலும் உரிய ஆவணத்துடன் வருவதாக கூறி சென்றவர் வராததாலும் இதில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் நபர்கள் தலைமறைவாகிவிட்டதாலும் இந்த வைரக்கற்களை போலீசார் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உரிய வழிமுறைகளின்படி இந்த வைரக்கற்களை நேற்று காலை சப்-இன்ஸ்பெக்டர் சகாயராணி தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த வைரக்கற்கள் முறைப்படி கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் உரிய ஆவணத்துடன் வந்து சமர்ப்பித்தால் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ராமநாதபுரத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான வைரக்கற்கள் யாரும் உரிமைகோர வராமல் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story