ஜோலார்பேட்டை அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு
ஜோலார்பேட்டை அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கட்டேரி ஊராட்சி பக்கிரிதக்கா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதேப் பகுதியை சேர்ந்த முரளி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு செல்போன் கோபுரம் அமைக்க செல்போன் நிறுவனத்திலிருந்து ஆட்கள் வந்துள்ளனர். ஆனால் இங்குள்ள பொதுமக்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து நிலத்தின் உரிமையாளர் முரளியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கைவிடுவதாக கூறி சென்றுள்ளார்.
தடைசெய்தனர்
இந்தநிலையில் நேற்று முன்தினம் நிலத்தின் உரிமையாளர், போலீஸ் பாதுகாப்புடன் செல்போன் கோபுரம் அமைக்க சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சென்ற போலீசார் பொதுமக்களிடம், அவரது நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். பின்னர் போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர்.
நேற்று மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு ஆட்கள் வந்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் சாலையிலிருந்து, செல்போன் கோபுரம் அமைக்கும் நிலத்திற்கு செல்லும் வழி தனி நபருக்கு சொந்தமானது என்பதால் இந்த வழியில் செல்லக்கூடாது என நிலத்திற்கு செல்ல முடியாதவாறு கற்களை வைத்து தடை செய்தனர்.
மறியல் செய்ய முயற்சி
மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட போவதாக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா ஜெகன், ஒன்றிய கவுன்சிலர் ஆ.கலா ஆஞ்சி, கட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் மாதவன், ஜமாத் தலைவர் அகமத் ஷெரிப் உள்ளிட்டோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிலத்தின் உரிமையாளர் இனி செல்போன் கோபுரம் அமைக்கமாட்டேன் என உறுதி அளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட முயன்ற அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story