ஆயிரக்கணக்கில் முறைகேடான குடிநீர் இணைப்புகள்


ஆயிரக்கணக்கில் முறைகேடான குடிநீர் இணைப்புகள்
x
தினத்தந்தி 7 April 2022 11:33 PM IST (Updated: 7 April 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கில் முறைகேடான குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக முதல் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரபரப்பாக குற்றச்சாட்டினார்கள்.

அனுப்பர்பாளையம்
திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கில் முறைகேடான குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக முதல் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரபரப்பாக குற்றச்சாட்டினார்கள்.
நகராட்சி கூட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் சிறப்புநிலை பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு 27 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் முதல் முறையாக திருமுருகன்பூண்டி நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. இதில் தி.மு.க.-9, இந்திய கம்யூனிஸ்டு-5, மார்க்சிஸ்ட்-3, அ.தி.மு.க.-10 வார்டுகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு திருமுருகன்பூண்டி நகராட்சியின் முதல் கூட்டம் நேற்று காலை கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் குமார் தலைமை தாங்கினார். கமிஷனர் முகம்மது சம்சுதீன், துணைத்தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். அப்போது கார, சார விவாதம் நடைபெற்றது. அதன் விபரம் பின்வருமாறு:-
 11-வது வார்டு கவுன்சிலரும், முன்னாள் தலைவருமான லதாசேகர் (அ.தி.மு.க.): - நகராட்சிக்கு தேவையான நிரந்தர பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். நகராட்சி முழுவதும் எரியாமல் உள்ள தெருவிளக்குகளை சரி செய்வதுடன், அனைத்து வார்டுகளுக்கும் எல்.இ.டி. விளக்குகளை வழங்க வேண்டும். கடந்த 7 மாதங்களாக கொசுமருந்து மற்றும் புகை மருந்து அடிப்பதே இல்லை. தற்போதுள்ள கட்டிடத்திலேயே நகராட்சி அலுவலகம் செயல்படும் என்றால் அதிக செலவு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். வேறு இடத்திற்கு மாறும் என்றால் செலவு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதை தவிர்க்கலாம்.
முறைகேடான குடிநீர் இணைப்பு
25-வது வார்டு கவுன்சிலர் பாரதி (தி.மு.க.): - நகராட்சியில் கடந்த காலங்களில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். அதை ஆராயும் வகையில் கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும். 
10-வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியம் (மார்க்சிஸ்ட்): - கடந்த 2008-ம் ஆண்டிற்கு பிறகு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. இதுவே குடிநீர் இணைப்பு முறைகேடாக பெறுவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. மேலும் 3-வது திட்ட குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். சொத்து வரியை படிப்படியாக உயர்த்தி இருக்க வேண்டும். வரிஉயர்வை மறுபரிசீலனை செய்து, சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
 4-வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன் (அ.தி.மு.க.): - எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். பூங்கா பணிகளை விரைவில் தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும்.
நடவடிக்கை
 14-வது வார்டு கவுன்சிலர் தேவராஜ் (மார்க்சிஸ்ட்): - முறைகேடாக குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிப்பதுடன், அதை பெற்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி அலுவல் பணிக்கு தேவையான ஊழியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
 8-வது வார்டு கவுன்சிலர் ராஜன் (தி.மு.க.): - வார்டில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 8-வது வார்டு கவுன்சிலர் நடராஜ் (அ.தி.மு.க.): - வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் சப்பை தண்ணீர் முறையாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும்.
 16-வது வார்டு கவுன்சிலர் தங்கவேல் (அ.தி.மு.க.): - வார்டில் உள்ள சீமக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். உப்புத் தண்ணீர் முறையாக வழங்க வேண்டும். 
இவ்வாறு விவாதம் நடைபெற்றது. ஒருசில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கேள்வி மேல் கேள்வில் எழுப்பினார்கள். அப்போது கமிஷனர் முகம்மது சம்சுதீன் பதில் அளிக்க முடியாமல் திணறினார். ஒருசில தகவல்களை செல்போன் மூலமாக பேசி தெரிந்து கொண்ட பின்னரே விளக்கமளித்தார். இதனால் கூட்டத்தின்போது பெரும் பரபரப்பு நிலவியது.
அடிப்படை வசதிகள்
 கூட்டத்தில் கவுன்சிலர்களின் விவாதத்திற்கு பதில் அளித்து தலைவர் குமார் பேசியதாவது:- கடந்த 6 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. தற்போது தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் நாம் வெவ்வெறு கட்சிகளாக இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்வது ஒன்றே குறிக்கோளாக செயல்பட வேண்டும். இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கி, அதற்கான தொகையை கட்டுவதற்கு வாய்ப்பு வழங்கலாம். 
 நகராட்சி முழுவதும் மரக்கன்றுகளை நட்டு, அதை முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
 சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி 2-ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிப்பது, நகராட்சியின் மக்கள் தொகை 37 ஆயிரமாக உள்ள நிலையில் தினசரி குடிநீர் தேவை 5 எம்.எல்.டி.யாக உள்ளது. ஆனால் 1.550 எம்.எல்.டி. குடிநீர் மட்டுமே கிடைப்பதால் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. எனவே 3.45 எம்.எல்.டி. குடிநீர் வழங்க குடிநீர் வடிகால் வாரியத்தை கேட்டுக் கொள்வது, திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், தற்போதைய அலுவலகத்தின் பின்புறம் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்ட உரிய வழிமுறையில் கருத்துருவை சமர்ப்பிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Next Story