விராலிமலை அருகே ரூ.2 கோடியில் வாஜ்பாய்க்கு கோவில் 2,400 சதுர அடியில் கட்டப்படுகிறது


விராலிமலை அருகே  ரூ.2 கோடியில் வாஜ்பாய்க்கு கோவில் 2,400 சதுர அடியில் கட்டப்படுகிறது
x
தினத்தந்தி 7 April 2022 11:40 PM IST (Updated: 7 April 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

ரூ.2 கோடியில் வாஜ்பாய்க்கு கோவில் 2,400 சதுர அடியில் கட்டப்படுகிறது

ஆவூர், ஏப்.8-
பா.ஜனதாவின் பிதாமகனாக கருதப்படும் அடல் பிஹாரி வாஜ்பாய் 1924-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி குவாலியரில் பிறந்தார். இவர் 3 முறை பிரதமராக பதவி வகித்துள்ளார். 50 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் (உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், டெல்லி) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் ஆவார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டு, இந்தியா அணு ஆயுத நாடாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற்றது, இந்த வெற்றி வாஜ்பாயின் மதிப்பை மேலும் உயர்த்தியது. வாஜ்பாய் பதவி காலத்தில் கொண்டு வரப்பட்ட தங்க நாற்கர சாலை திட்டம் நாட்டின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களை இணைக்கும் 5 ஆயிரத்து 846 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளை 4 வழிப்பாதைகளாக மாற்றியமைக்கும் திட்டத்தை 1998-ம் ஆண்டு வாஜ்பாய் தொடங்கி வைத்தார். 
இதுபோன்று பல்வேறு திட்டங்களை தமது பதவி காலத்தில் செயல்படுத்திய வாஜ்பாயின் சேவைகளை பாராட்டி, அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா" விருது கடந்த 2015-ம் ஆண்டு வழங்கப்பட்டது. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக  கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி மறைந்தார்.
இந்தநிலையில் பா.ஜனதாவின் 42-வது ஸ்தாபன தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் வீரம்பட்டி அருகே வாஜ்பாய்க்கு கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேத்தி உமாபாரதி கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதுகுறித்து கோவிலை கட்டும் குழுவினர் கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு 2,400 சதுர அடியில் 3 அடுக்கு கோவில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இங்கு பாரதமாதாவுக்கு 5 அடி உயர முழு சிலையும், வாஜ்பாய்க்கு 3½ அடி உயரமுள்ள மார்பளவு சிலையும் வடிவமைக்கப்படுகிறது. இந்த கோவில் வாஜ்பாய் அறிவுத்திருக்கோவில் என்று அழைக்கப்படும், என்றார்.

Next Story