திருப்பத்தூர் மாவட்டத்துக்கு சட்டமன்ற மனுக்கள் குழு வருகை. கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்


திருப்பத்தூர் மாவட்டத்துக்கு சட்டமன்ற மனுக்கள் குழு வருகை. கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்
x
தினத்தந்தி 7 April 2022 11:44 PM IST (Updated: 7 April 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு சட்டமன்ற மனுக்கள் குழு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021-22-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு திருப்பத்தூர் மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதனையொட்டி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரே, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள், குறைகள் குறித்து மனுக்களை (5 நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை என்ற முகவரிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்பலாம்.

மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சினைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும். அவ்வமயம், மனுதாரர் முன்னிலையில், குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இதுகுறித்து, மனுதாரர்களுக்கு கலெக்டர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். 20-ந் தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story