பல்வேறு பிரிவினரை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும்


பல்வேறு பிரிவினரை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 7 April 2022 11:46 PM IST (Updated: 7 April 2022 11:46 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு பிரிவினரை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என கே.நவாஸ் கனி எம்.பி கோரிக்கை விடுத்தார்.

பனைக்குளம், 
ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான கே.நவாஸ்கனி எம்.பி பல்வேறு கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதாவது:- நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் இன்னும் சமுதாயத்தில் இருக்கின்ற பல்வேறு பிரிவினர் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்கள் தங்களையும் பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். தற்போது இந்த அவையில் கொண்டு வரப்பட்டு இருக்கும் மசோதா ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு சில பிரிவினரை பட்டியல் இனத்தில் சேர்க்கப்படுவதை முன்மொழிகிறது.  ஜார்கண்ட் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்னும் அடித்தட்டு நிலையில் கூட முன்னேறாத பல பிரிவினர் தங்களை பட்டியல் இன மக்களாக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். தமிழகத்தில் 1965 முதல் நரிக்குறவர் சமுதாயத்தினரை செடூல் டிரைப்ஸ் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மாநில அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. எங்களுடைய மாநிலத்தில் இன்னும் நரிக்குறவர், குருவிக்காரர், குறும்பர் சமுதாயத்தினர் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களையும் இப்பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்். ஏன் அவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை? எங்கள் பகுதிகளில் உள்ள மீனவ சமுதாயத்தினர் பலர் தங்களையும் பழங்குடி மக்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். அவர்களையும் பட்டியலின வரிசையில் சேர்க்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் போது அங்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும். எனவே, அரசு பட்டியலின மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வண்ணம் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Next Story