ஏரியூர் அருகே, நிலத்தகராறில் விவசாயி தீக்குளிக்க முயற்சி
ஏரியூர் அருகே நிலத்தகராறில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏரியூர்:
ஏரியூர் அருகே நிலத்தகராறில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது சிகரலஅள்ளி. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தனது நிலத்தை ஆக்கிரமித்து ஒரு சிலர் சாலை அமைத்துள்ளதாக பாண்டுரங்கன் (வயது 48) என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், நிலத்தை அளவீடு செய்யும் பணியை தாசில்தார் அசோக்குமார் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.
அப்போது அதே ஊரை சேர்ந்த பக்கத்து நிலத்தின் உரிமையாளர் சாமிகண்ணு (45) மற்றும் விவசாயி ரகுராமன் (45) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை அடுத்தவருக்கு விட்டுத்தர மாட்டோம் எனக்கூறி தாசில்தார் அசோக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த பாதையை 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம், மேலும் இந்த பாதையை தடுப்பதன் மூலம் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தீக்குளிக்க முயற்சி
இந்த நிலையில் ரகுராமன் திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக போலீசார் அவரை தடுத்து நிறுத்தி ஏரியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து ஏரியூர் போலீசார் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலத்தகராறில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story