குருபரப்பள்ளி அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி வழிப்பறி-வாலிபர் கைது; நண்பருக்கு வலைவீச்சு
குருபரப்பள்ளி அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தப்பிஓடிய அவருடைய நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.
குருபரப்பள்ளி:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பக்காபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் இளவரசன் (வயது 28). இவர் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் நுட்ப மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் மோட்டார்சைக்கிளில் ஆம்பூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி பாஞ்சாலி நகர் பகுதியில் அவர் சென்ற போது இயற்கை உபாதை கழிப்பதற்காக மோட்டார்சைக்கிளை நிறுத்தினார்.
அந்த நேரம் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் இளவரசனை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். அப்போது இளவரசன் அவர்களில் ஒருவரை பிடித்து கூச்சலிட, மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட நபரை அக்கம் பக்கத்தினர் சுற்றி வளைத்து பிடித்து குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி விசாரணை நடத்தினார். அதில் வழிப்பறியில் ஈடுபட முயன்றது கிருஷ்ணகிரி பழையபேட்டை தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வா (29) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது நண்பரான கிருஷ்ணகிரி பழையபேட்டை தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொன்னையன் (32) என்பவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story