உலமாக்களுக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்கள்


உலமாக்களுக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்கள்
x
தினத்தந்தி 8 April 2022 12:22 AM IST (Updated: 8 April 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

உலமாக்களுக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்கள் வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

தமிழக வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 98 வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணிகளை செம்மையாக செய்வதற்கும், சமயப்பணி ஆற்றுவதற்கும் புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 வயதில் இருந்து 45 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். 

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெற்ற சான்று, சாதி சான்று, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீட்டுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளர் கையொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும், வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல் இணைக்கப்பட வேண்டும்.

இதற்கான படிவத்தினை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தில் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
1 More update

Next Story