களக்காடு நகராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகை
களக்காட்டில் நகராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
களக்காடு:
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களக்காடு நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. இந்த நிலையில் களக்காடு பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயர் சூட்ட நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் களக்காடு பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு நேற்று திடீரென நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர்கள் களக்காடு பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் களக்காடு நகராட்சியில் சந்தை அமைக்க வேண்டும், வாறுகால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் நகராட்சி ஆணையாளர் ரமேஷிடம் கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story